Sunday, February 12, 2017

Wednesday, January 12, 2011

Saturday, November 15, 2008

தீட்டு (துடக்கு)

மனிதனாக
பிறந்தாலும் −அது
மற்றவர்க்கு துடக்கு

வாழ்க்கையின்
நடுவில் வீட்டுக்கு
விலக்கு

பாடையில்
போனாலும்−அதுவும்
துடக்கு

யார் ஜயா போட்டது
இந்த தப்புக்கணக்கு

Wednesday, November 12, 2008

சிலுவைகள் சுமக்கின்றோம்

காற்றோடு காற்றாக
பறந்து செல்லும்
வெற்றுக் காகிதங்கள்
நாங்கள் அல்ல

எழுதப்பட வேண்டிய
புதுக்கவிதைகள் நாம்

உறவுகளை இழந்து
உணர்வுகளைப் புதைத்து
முற்களின் பாதையில்
நடக்கின்ற சிட்டுக்
குருவிகள் நாம்

`அ` எழுத வேண்டிய
பிஞ்சுக்கைகள்
பழுத்து சிவப்பாக...

புத்தகம் சுமக்கும்
வயதிலே…..
சிலுவைகள்
சுமக்கின்றோம்

அன்னையவள் அன்பு
முத்தம் எங்கே?
அணைத்திடும் தந்தை
கைகள் எங்கே?
கண்ணீ ர் துடைத்திடும்
தங்கை எங்கே?

அன்புக்கு ஏங்கும்
இதயங்களாக நாம்


உறங்கிட முற்றமில்லை
பசித்திடின் புசிக்கவில்லை
மானம்காகாக்க உடைகூட இல்லை

பசி எமக்கு நண்பன்
தரை எமக்கு மெத்தை
மழை எமக்கு குளியல்

எம் இருள் களைந்து
ஒளியேற்ற உதவிக்கரம் தந்திடுவீர்

தமிழ் கவியோ


கட்டு இளகி
மொட்டவிழ்ந்த
புன்னகைப் பூ இதுவோ

சிட்டு அவள்
இதழ் கவிழ்ந்த
தேன்கிண்ணம்தான் இதுவோ

முத்தாக
மின்னுகின்ற-பல்
மாதுளைதான் அதுவோ

கண்களின்
கருமையது
கருவண்டுதான் அதுவோ

தென்றலிலே
தவள்ந்துவரும்
தெம்மாங்குதான் அவளோ

சத்தமிட்டு
முத்தமிட்ட
தமிழ்க் கவிதான் அவளோ


Monday, November 10, 2008

அகதிகளாகி

அகதிகளாகி
அலைகடல்-ஏறி
அக்கரை சேர்ந்த
ஓடங்களே....

உடமைகள்--இழந்து
உறவினைப்-பிரிந்து
உடல்களைச்-சுமந்த
ஜீவன்களே....

உங்கள் அழுகையின்
கண்ணீர் கடலுடன்-கலந்து
உப்பாய்போனதோ
சொல்லுங்களேன்....

இடை நடுவில்
பகையது வந்து
கதையை முடிக்குது
பாருங்களேன்....

அவர்கள் உதிரங்கள்-பெருகி
கடலுடன் கலந்து
மீன்களும் கலங்குதோ
சொல்லுங்களேன் ....

கரைகள் சேர்ந்த
உயிர்கள் கூட
சுகந்திரமின்றி
முடங்கி இருக்குது
பாருங்களேன்

Sunday, November 9, 2008

எங்கே போகிறாய் தமிழா

Fotoவெளிநாட்டில் தமிழனுடனும்
தமிழில்பேச வெட்கப்படுகிறாய்
எங்கே போகிறாய் தமிழா
எங்கேபோகிறாய்.........

வேற்று மொழிபேசி நீயும்
உன் தாய்மொழி மறந்து நீ
எங்கே போகிறாய் தமிழா
எங்கேபோகிறாய்.........

காதில தோடுபோட்டு
எடுப்பாக நடந்து நீயும்
எங்கே போகிறாய்
தமிழா எங்கேபோகிறாய்..........

தலை முடிக்கு சாயம்பூசி
குதிரைகால் செருப்புபோட்டு
எங்கே போகிறாய் தமிழா
எங்கேபோகிறாய்..........

வெளிநாட்டில் வந்து உன்
பண்பாடு மறந்து நீயும்
எங்கே போகிறாய்
தமிழா எங்கேபோகிறாய்..........

தமிழின் சமயம் விட்டு
தாவிக்குதித்து நீயும் எங்கே
போகிறாய் தமிழா
எங்கேபோகிறாய்..........

வெள்ளையன் நடையைபார்த்து
அவனைப்போல நடந்துகொண்டு
எங்கே போகிறாய் தமிழா
எங்கேபோகிறாய்..........

ஊரில் உள்ள உறவை−தாய்
நாட்டை மறந்து
எங்கே போகிறாய்
தமிழா எங்கேபோகிறாய்..........

Saturday, November 8, 2008

வட்டமிட்டாய்

படம்
சுற்றி சுற்றி வட்டமிட்டாய்
உள்ளம் எங்கும் முத்தமிட்டாய்

தேன் குழைய பேசி என்னை
தேனி போல மொய்கவைத்தாய்

காத்திருந்து கதைகள் பேசி
காதல் வலை வீசிச் செல்வாய்

கள்ளமில்லா எந்தன் நெஞ்சில்
காதல் விதை தூவிச் சென்றாய்

எட்டி நின்றேன் ஏணிப்படியில்
கிட்டவந்து இறக்கி விட்டாய்

என் உள்ளம் எல்லாம்
உன் சிந்தை என்றாய்

சிக்கித் தவித்து தேடிவந்தேன்
தேடாமல் நீயும் போனது ஏனோ

Tuesday, October 14, 2008

விண்மீனாஇருளினிலே மருளுகின்ற
விண்மீன்கள் கொண்டாட்டம்
இருவிழிகள் கருவிழியால்
விடுகிறதே காதல் தேரோட்டம்

மின்சார விழிகள் இரண்டும்
மின்னி இழுக்கிறது மின்மினியாய்
கயல்விழியே என் இதயம்
காந்தமாகக் கவர்கிறதே

தேவதையே உன் நினைவுகள்
தேய்ந்துவிடாத வளர்பிறையே
தேம்பி அவனும் அழுகின்றான்
தேங்காமல் நீயும் வந்துவிடு

தேனைப்பருக என்று
தேடிவந்த தேனிகூட
தேவி உன் முகம் கண்டு
தேகம் சிலிர்த்ததுவோ

தீண்டவில்லை உன் இதழை
தித்திக்கும் சுவைகண்டும்
தீங்கிழைக்க விரும்பாமல்
தீர்க்கமாய் காத்திருக்கு

தேவலோக கன்னியே
நீயும் வந்துவிடு
தேவனுக்கு அன்பே
நீயும் உன்னைத்தந்துவிடு

வெண்ணிலாசின்ன சின்ன கவி
சொல்ல வந்தேன்
வெண்ணிலாவே

உன் வெண்மையினால்
என் உயிர் சிதைந்தது
வெண்ணிலாவே

நட்ச்சத்திரங்கள்
உன்னைப்பார்த்து
கண்சிமிட்டுது வெண்ணிலாவே

அந்த கண்சிமிட்டை
எப்படித்தான் தாங்குறாயோ
வெண்ணிலாவே

பொறாமை கொண்ட கருமுகில்கள்
உன்னை மறைக்கிறது
வெண்ணிலாவே

கருமுகில்கள் மறைக்கும்போதுதான்
உன் உடையை மாத்துகிறாயா
சொல்லு வெண்ணிலாவே

வாணில் உள்ள
வால் வெள்ளிகள்தான்
வெண்ணிலாவே

உனக்கு காதல்
தூது செய்கின்றதா
சொல்லு வெண்ணிலாவே

உயிரோடு உயிர்
சேர்ந்தால்த்தான்
காதல் வெண்ணிலாவே

காதலிலே தோல்வியுற்றால்
மரணம் தானா பதில்
சொல்லு வெண்ணிலாவே