Sunday, June 29, 2008

கவிதை



பத்து மாதம்
கருவறையில்
பக்குவமாய்
பயிற்றுவித்து

உடல் உயிர் கொடுத்தாய்

நீ சிற்பி
நான் உயிர் சிலை

நீ வரைஞன்
நான் ஓவியம்

நீ படைப்பாளி
நான் உன் கவிதை

Saturday, June 28, 2008

உனை வரைந்தேன்



வான வில்லின்
வர்ணங்கள் வளைத்து
எண்ணம் என்னும்
வண்ணம் எடுத்து

கற்பனைத்தேன் கலந்து
காரிகை உனைக் கிறுக்க
தூரிகை நான் எடுத்தேன்

காவியம் பேசும்- அவள்
கண்கள் வரைய
கரு முகிலை தூதுவிட்டு
கருவிழியாக்கினேன்

சிறகடிக்கும்
சிட்டுக்குருவியின்
இறகை- அவள்
இமைக்கு மடலாக்கினேன்

வளர்ந்து வரும்
வளர் பிறையை
வளைத்து-அவள்
வதனத்தில் வைத்தேன்

இளம் தளிர்-அவள்
இதழ் வைக்க
இதழோடு-பூ
இதழ் வைத்தேன்

கார் காலத்து
கரும் இருளை
காதல்-கள்ளியின்
கூந்தலாக்கினேன்

தேன் நிலவு
தேவியை தேடி-பிடித்து
திருமகளின்-திரு
திலகமாக்கினேன்.

வெண்ணிலா நீ என்

படம்

வெண்ணிலா நீ என்
கண்ணிலா

தொட்டுவிட்டாய்
பெண்ணிலா

வண்ணங்களில்
பால் நிலா

பார்வையிலே
தேன்கனா

சோகம் ஏன் உன்
நெஞ்சிலா

தாலாட்ட வா
தென்றலா

காதலில்லை இது
வெண்புறா

கட்டவிழ்ந்த
கவியுலா

காதல்



காதல்
குதிரைப்பந்தயம்

நானும் போகலாம்
நீயும் போகலாம்

காதல் வானில்
கலக்கலாம்

சிறகுகள் விரித்தும்
பறக்கலாம்

கடிவாளம்-உன்
கையில் இருந்தால்

கிறுக்கல்கள்

வரியில்லா மொழி
ஒலியில்லா பேசும்
அவள் கண்கள்
********* ******

படபடக்கும் பட்டாம் பூச்சியின்
இறக்கைகள் பார் அங்கே
அவள் இமைகளில்
**********************

ஏன் இத்தனை மொழிகள்
இந்த உலகத்தில்
அவள் கண்களால் பேசும்
இந்த மெளன மொழியே போதும்
***********************************

என் பெயரின் இனிமை
எனக்குப் புரிந்தது
நீ என் பெயர் சொல்லி
அழைத்த போது
*****************

வான் மதியே
தேய்ந்ததுவோ
உன் மதிமுகம்
கண்டதாலா
*************

கவிதைகள் என்றார்கள்
உன் பெயரை நான்
கிறுக்கியபோது
****************

பாடம் நடத்து

சிலையாக வடித்த
சிற்பம் தான் அவளோ

இப்பொழுது மலர்ந்த
மல்லிகைதான் இவளோ

கண்கள் இரண்டும்
கதைகள் பேசின

காதலின் விரசம்
இதழ்களில் தவழ்ந்தன

வகுப்பறையில்....
பாடங்கள் மறக்க
பாடம் கற்பித்தாய்

நீ ஆசான்
நான் மாணாக்கன்
ம்ம்ம்
பாடம் நடத்து

நீங்காத உறவு




ஊர்கள் இழந்து
உறவுகள் மறந்து
உயிர்கள் சுமந்த உடல்கள்

முகங்கள் அழிந்து
தமிழை மறந்து
கால்கள் போன தேசம்

கண்கள் கலங்கி
நெஞ்சம் உருகி
வெடிக்குது ஈர இதயம்

பந்தம் அறுந்து
சொந்தம் விலகி
கிளைகள் விழ்ந்த விருட்சம்

இறக்கைகளின்றி
பறக்க துடிக்கும்
பாசம் என்னும் வேகம்

உள்ளம் உருகி
வெள்ளம் பெருகி
ஓடட்டும் ஊற்றாய்

நினைவுகள் யாவும்
நிழலாய்த் தொடரும்
நீங்கிடது உங்கள் கொடியுறவு

தேசத்தின் குரலோனே

தேசத்தின் குரலோனே
செங்கதிர் சொல்லோனே
தேசியத்தின் சுவடோடு
சென்றுவிட்ட வல்லோனே
தமிழ் வாழும் நாள் எல்லாம்
வாழ்ந்திடுவீர் எம்மோடே

காலனின் வருகை கண்டும்
கலங்கினீர் தமிழனுக்காய்
காலம் கனியும் நேரத்தில்
கவர்ந்து விட்டான் காலதேவன்

பேனா முனைகளிலே
பேசியது உம் உணர்வு
துப்பாக்கித் தோட்டாவாக
துளைத்தது சிங்களத்தை

பேச்சுவார்த்தை மேசைகளில்
பேரமிட்ட சிங்கள துவேசிகளை
மதியுரைஞர் உம் மதியினாலே
மதியிழந்து கலங்கவைத்தீர்

போரும் சமாதனமும் தந்தீர்
போற்றுகின்ற பொக்கிசமாய்
நோய் வந்து உழன்றபோதும்
நேசித்தீர் சமதானத்தை

தேசியத்தலைவரின்
நேசத்துக்குரிய நண்பா
தேசம் போற்றும் உம்
நேசக்கரம் என்றும்

ஏன் மறந்தாய்

எனை ஏன் மறந்தாய்
என் அன்பே இன்று-இங்கே

கவிதைகள் கண்டு அன்று
கருத்துக்கள் தந்தாய்-பெண்ணே

பாசத்தின் நிழலாய் வந்து
நெஞ்சத்தில் சுவடாய் நின்றாய்

பழகியநாட்கள் எல்லாம்
பசுமைச் சோலைகளாய்-நீ

க்விதைக்களத்தில் அன்று
காறி அவன் உழிழ்ந்த போது

பதில் கணை கொடுத்து
கை கொடுத்தேன் உனக்காக

தேடிவந்த நட்பு அவனை
தேடவில்லை அன்று உனக்காக

ஏன் இந்த மெளனம் இன்று
கலையட்டும் அது எனக்காக

பச்சோந்தி

படம்

வர்ணங்கள் காட்டுகின்றாய்
இருக்கும் இடம் கொண்டு

படைத்தவன் பெருமையது
பாரினில் அது மிகச்சிறப்பு

உயிர் காக்கதந்த வரம்
உத்தமனார் கொடுத்த நிறம்

பகுத்தறிவு கொண்ட
மானிடா.......................

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுகின்றாய்

சந்தர்ப்பம் கண்டு-நீயும்
மாறுகின்றாய்

பச்சோந்தி மனிதனாக......


நியாயமா?

மழலை

வண்ண எழில்
வதனமடி
வான் வெளியில்
பனிச்சாரலடி

கண்களிலே கருமைக்
காந்தமடி
பார்வையிலே பவள
மின்னலடி

இதழ்களில் தேன்
கிண்ணமடி
சிரிக்கிறதே பால்
வெண்மையடி

பேசுகின்றதே கிள்ளை
மொழியடி
இனிக்கிறதே அதன்
இனிமையடி

கால்கள் பஞ்சு
மெத்தையடி
மிதிக்கின்றதே அது
சொர்க்கமடி

அவள்

வான் வெளியில்
வண்ண நிலா
பொட்டு வைத்த
வட்ட நிலா
சேயைத்தாலாட்டும்
தங்கத்தாய் அவளா

கார் இருளில்
விண் தாரகையா
கண் சிமிட்டும்
பெண் காரிகையா
காதலன் விழிகளில்
காதல் பைங்கிளியா

வான வில்லின்
வர்ண ஜாலங்களா
கண்களில் அவள்
காமா பாணங்களா
மேகத்தில் தீட்டிய
மேனகைதான் அவளா

பொறுமையில் அவள்
பெண் பெட்டகமா
உயிர் கொடுத்த
உன்னத சித்திரமா
சுமைதாங்கும்-அந்த
தூண்கள் அவள்தானா

கவிதைகளில் அவள்
காதல்க் கற்பனையா
இனிக்கின்ற தமிழ்
தேன் சுவை உச்சமமா
பேசும் மொழிகளின்
தாயும் அவள்தானா

காலைப்பொழுது

ஆதவன் தேரிலே
அரியணை ஏறியே
அகிலம் ஒளிரவே
அக்கினி சுரந்தனன்

பகலவன் செங்கதிர்
பங்கயம் தீண்டவே
பனிபட்ட இதழது
பகலாய் முகிழ்ந்தது

களிறின் பிளிறல்
சங்காக முழங்கிட
செவிகள் இரண்டும்
சாமரை வீசவே
துதிக்கையால் துதித்தது
தூயவன் ஞாயிறை

இளம் குளிர் காற்று
இதயத்தை நனைக்க
இன்பம் பொங்கிட
இனிமையாய் புலர்ந்தது

காக்கையின் கரைதலும்
குயிலின் பாடலும்
மஞ்ஞையின் அகவலும்
காதில் ஒலித்திட
கரைந்தது இருள்
மலர்ந்தது பகல்

இளமைக்காலம்

கொத்துக் கொத்தாய்
பூத்த மலர்கள்
தலைகள் சாய்ந்து...
பசுமை இலைகள்
பழுத்து விழுந்து...
சுட்ட சூரியன்
வெப்பம் தனிந்து...
பகல்ப் பொழுதும்
இருள் கவிழ்ந்து...
வெண்திரைப்பனி
வானத்தை மூடி...
குளிரின் வலிமை
உடலைத்துளைக்க...
பிறந்தது குளிர்காலம்
போனது இனிய மோகம்...
மீண்டும் பிறக்கும்
அந்தக்காலம் -இனி...
மீண்டும் மீள்வோமா-நாம்
அந்த இளமைக்காலம்

உன் நினைவு

பள்ளி நாட்களில்
பட்டாம் பூச்சிபோல்
பழகிய உன் நினைவு
பசுமையாக என் மனதில்...

பல்லாண்டுகள்
பல பொழுதுகள்
பறந்து போனாலும்
பால் நிலவாக உன் நினைவு...

நட்புக்கு நீயும் தோழி
இரங்குவதில் நீயும் என் தாய்
அன்புக்கு நீயும் காதலி
அறிவில் நீயும் என் ஆசான்

உன்னை நான் சந்தித்தேன்
இளவேனிற்காலம்
உன்னை நான் பிரிந்தேன்
இலையுதிர்காலம்
உன்னைப்பிரிந்த பின் என்வாழ்வு
மாரிகாலம்

வாழ்கை என்பது கனவு
உன் நினைவுகள் நனவு
உறங்குமா உன் நினைவு

காதலைச்சொல்லிவிடு

காதல் என்றால் என்ன என்று
காகிதத்தில் எழுதிவைத்து- நீயும்
காத்திருந்தால் காதல் வந்திடுமோ?
காலம்தான் பதில் சொல்லிடுமோ?
காதல் கன்னி அவளைக் கண்டு
காதல் நீயும் கொண்டுவிட்டால்
காத்திராமல் சொல்லிவிடு-அன்பே
காதல் என்னும் கனி இரசத்தை
காதல் கொண்டு நீயும்-உன்
காதல் சொல்லாவிட்டால்-நண்பா
காலம்முழுவதும் அவள் நினைவாகி
காற்றோடு பறந்திடும் உன் அன்பு

புரிவதில்லை

மழைத்துளியின் சோகங்கள்
மண்ணுக்குத் தெரிவதில்லை
மழலையின் இனிய மொழி
மற்றவர்க்குப் புரிவதில்லை
மலர்களின் வாசம் தன்னை
மலர்க் கூந்தல் அறிவதில்லை
மங்கையின் மன ஆழத்தை
மன்மதனும் அறிந்ததில்லை
இதயத்தின் உணர்வுகளை
இதயங்கள் உணர்வதில்லை
தந்தையின் சுமைகள்
இளமையில் புரிவதில்லை
தாயின் அன்புதன்னை
தானிருக்கும்போது புரிவதில்லை
கண்ணீரில் ஈர வலிகள்
கண்களுக்குப் புரிவதில்லை
வானவில்லின் வர்ண ஜாலம்
சந்திரனுக்குத் தெரிவதில்லை
உடலின் முடிவுதன்னை
உணர்வுக்குப் புரிவதில்லை
காலனின் வருகைதன்னை
காலத்துக்கும் தெரிவதில்லை
காதலின் வலிகள்
காமுகர்க்குப் புரிவதில்லை
நட்பின் இலக்கணம்
நயவஞ்சகர்க்குப் புரிவதில்லை

உணர்வுகள்

நீயிருந்த கருவறையில்
நானும் இருந்தேன்
பெருமை அண்ணா....

கல்லறையில் நீ உறங்க
கண்ணீரில் நானும் இங்கே

தாய் மண் காத்திடவே
தலைவரின் வழியில் நின்றாய்

தாய் தந்தை வாழ்வுக்காய்
அகதியாக நானும் இங்கே

கல்லறையில் நீயும் அன்பே
நிம்மதி உறக்கமா அண்ணா???

நாலுசுவர் வீட்டினிலே இங்கே
நரகப்பட்ட வாழ்க்கையடா

நானும் வந்து இணைந்திடவே
நாளங்கள் துடிக்குதடா

நான் வந்து உனைக்கான
காத்திருந்த வேளை அண்ணா.....

வீரச்சாவு செய்தி கேட்டு
என்னை நான் இழந்தேன

என் குரல் கேட்காமல்
எப்படி நீயும் உறங்குகின்றாய்?

உன் இனிய குரல் ஓலி
இன்னும் என் காதில் ஒலித்து .....

என் கண்களில் நீராய் கரையுது
அண்ணா........

என் கவிதைகளுக்கு ஊக்கம் தந்த நண்பியின் அண்ணாவுக்கு
வீரவணக்கம்

பொன்மானோ

மார்கழி மாதத்து
மாலை நேரத்தில்
மலர்விழி உன்னை
மலர்த்தோட்டம்தனில் கண்டேன்.....

மழைத்துளியில் நீயும்
மயங்கி விளையாடி
மலர்க்கூந்தல் கலைந்து
மயங்கிநின்ற வேளையில்.....

மலர்க்கூட்டங்களில்
மறைந்திருந்து பார்த்தேன்.....

மலர்போன்ற உன் அழகை
மரகதமே உன்னையடி.....

மறக்கவே முடியவில்லை
மயில் போன்ற உன் நடையும்
மல்லிகைக்கொடியிடையும்

மன்மதன் அவன் உன் அழகில்
மயங்கிய நின்று
மதியென விழித்துவிட்டேன்
மான்விழியாள் எனைக்கண்டு.....

புள்ளிமான் போல
நாணம் கொண்டு
ஓடியே மறைந்துபோனாள்
என் இதயம் திருடிக்கொண்டு
தேடினேன் காணவில்லை
மாரிசன் மாறிவந்த
பொன்மான் அவள்தானே?

வீரத்தாலட்டு

தூங்காதே
கண்மணியே-நீயும்
தூங்காதே

தூக்கம்
வந்தாலும்-நீயும்
தூங்காதே

தமிழுக்கு
நாடுவரும்-வரை
தூங்காதே

பகைவனும்
வந்திடுவான்-அன்பே
தூங்காதே

பச்சைப்பிள்ளை
என்றும்-பாரான்
தூங்காதே

உறவுகள் இழப்புக்
கண்டும்-நீயும்
வெதும்பாதே

அவர்கள் உதிரம்
எழுதும்-எம்
தாய் நாடே

பெற்றஅன்னை
அவளும்-அன்பே
நான்தானே

என்காயங்கள்
மாறுது-கண்ணே
உன்வரவாலே

களம் சென்ற
தந்தை-வருவான்
தூங்காதே

வீரனின்
புதல்வனும்-அன்பே
நீதானே

விரைவில்
வளர்ந்துவா-காப்போம்
நம்நாடே

என்ன வலை

படம்

சின்ன சின்ன சிலந்தியே
உந்தன் உமிழ் நீரினால்
சின்ன வலை கட்டியே
காதல் வலையா வீசுகின்றாய்?

கனவில் வந்தவளே

குயிலேபாட
மறுக்கின்றதே
அன்பே அன்பே....

உன் இனிய குரல்
கேட்டதினாலே
பெண்ணே பெண்ணே...

மயில்கூடா
நடைபயில
நானுகின்றதே

உன் நடை
அழகைக்
கண்டதினாலே
கண்ணே கண்ணே...

என் பார்வை
நான் இழந்தேன்
என்னவளே

உன் பார்வை
என் மீது
பட்டதினாலே

என் மூச்சை
நானும் இங்கே
இழந்தேன் இழந்தேன்...

உன் மூச்சு
என் மீது
பட்டதினாலே

உன் கூந்தல்
மலர் வாசம்
என்றேன் என்றேன்...

உன்கூந்தல்
வாசம்தனில் எனை
இழந்த்தினாலே

கறுப்பும்
அழகு என்றேன்
பெண்ணே பெண்ணே...

உன்னை நான்
கண்டதினாலே
அன்பே அன்பே...

என்னை நான்
இழந்து உன்னைத்
தேடுகின்றேன்

காணவில்லை
என்னவளே
நீயும் எங்கே எங்கே....

என் கனவில்
வந்த தேவதையோ
பெண்ணே பெண்ணே...

வாளைப்பறி

எறிஎறி
தமிழா
எறிஎறி

எரிதணல்
அதனை
எறிஎறி

எதிரிகள்
படைகளை
அடிஅடி

போர்
விமானத்தை
அடிஅடி

ஓடும்
படைகளைப்
பிடிபிடி

எம் சொந்த
மண்ணைப்
பிடிபிடி

இழந்த
எம் உரிமை
பறிபறி

சிங்கத்தின்
வாளைப்
பறிபறி

சீண்டும்
அதன் தலையை
தறிதறி

காதலில் பின் பெண்

இனிமையான
அந்த
நாட்கள்
இருண்டு விட்டதோ

உங்கள் இளமை
துள்ளும் இனிய
இதயம்
நொந்து விட்டதோ

இனிமையான
அந்த வார்த்தைகள்
இன்று அவனுக்கு
புளித்து விட்டதோ

உன் வாழ்க்கை
இன்று
இருண்ட
மேகமாகி விட்டதோ

தென்றலான
உன் நினைவு
இன்று மழை
வெள்ளமாகி விட்டதோ

நீயும் தத்தளித்து
தேம்புகிறாய்
கவிதை
வெள்ளத்தில்

உன் காதலனும்
இங்கு
கை கொடானா
இந்த நேரத்தில்

அலைபாயும்
மனம் தானா
ஆண்கள்
இதயங்கள்

அதில் உன்
நினைவு வர
வில்லையா
அந்த இதயத்தில்

கடவுள்

கடவுளின்
பெயரினால்
கட்சிகள்
கூட்டுகின்றார்

சாமியாரின்
வேடத்தில்
காம லீலைகள்
புரிகின்றார்

கடவுள் என்று
போற்றியவர்
இன்று கம்பி
எண்ணுகின்றார்

நடமாடும்
தெய்வம் என்று
நல்லா நாடகம்
ஆடுகின்றார்

மூடநம்பிக்கையில்
எம்மவர்
மூழ்கிப்போய்
இருக்கின்றார்

கற்கள் பால்
குடிப்பதாக
பாலும் வீணாக
ஊத்துகின்றார்

உலகில்
சைவத்தை
சும்மா கேவலப்
படுத்துகின்றார்

இறைவனைத்
தேடுவதாய்
தாவிக்
குதிக்கின்றார்

அறியாமையினால்
தம்மைத்
தாமே
ஏமாற்றுகின்றார்

உனக்குள்
இறைவன் உண்டு
அதை ஏற்க
மறுக்கின்றாய்

என்னவனே

உன்னை நினைத்து
உன்னை நினைத்து
என் இதயமே
ஏங்குறேனடா

என் காதல்
சொல்ல முடியாமல்
இங்கு செல்லம்
தவிக்கிறேனடா

உந்தன் அன்பு
உள்ளம் தன்னை
நானும் இங்கு
விரும்புறேனடா

நீ பேசும்
தமிழை என்றும்
இனியவனே
சுவாசிக்கிறேனடா

காதலை முன்பு
வெறுத்தவள்
அன்பே
நான் தானடா

உந்தன் காதல்
வலையின்
சிக்கி இப்ப
தவிக்கிறேனடா

உன்னை
எண்ணி எண்ணி
எனக்குள்
சிரிக்கிறேனடா

காதல் பித்தில்
நானும் இன்று
தளம்புறேனடா

கானும் பொருள்
எல்லாம் உன் அழகு
வதனம்தானடா

நான் கேட்கும்
ஓசை எல்லாம்
உந்தன் பெயர்தானடா

என்னவளே

என்னவளே
என்னவளே
என் கண்ணின்
கருவிழியே!
கருவுக்கு
உயிர்கொடுக்கும்
உன்னதப்
பெண் இவளே!
என்னவளே
என்னவளே
என் குருதியும்
நீதான் என்னவளே!
உன் குருதியை
பாலாக்கி சேய்க்கு
ஊட்டும் உமையும்
நீதான் என்னவளே!
என்னவளே
என்னவளே
உன் கூந்தல்தலின்
கருமைதான் என்னவளே!
மதிபோன்றமுகத்தின்
கருமுகில்தான்
உன் கூந்தலா
மன்னவளே!
என்னவளே
என்னவளே
உன் குரலின்
இனிமைதான் என்னவளே!
நான் கேட்கும்
இசைதானா
உன் குரல்
என்னவளே!
என்னவளே
என்னவளே
என் இதயத்துடிப்பும்
நீதான் என்னவளே!
நீ இல்லை எனின்
என் இதயத்துடிப்பு
நின்றுவிடும்
மன்னவளே!
என்னவளே
என்னவளே
என் மூச்சுக்காற்றும்
நீதானா என்னவளே!
நீ இல்லை எனின்
என் உடல் ஜடம்
ஆகிவிடும்
மன்னவளே

விரக்தி

பல
பட்டங்கள்
வாங்கினேன்

அதைவிட
நூல்
இல்லை

நூல்
இல்லாப்
பட்டமாக

அலைகின்றேன்
நான்
இங்கே

வாழ்க்கைக்கே
அர்த்தம்
இல்லை

ஏன் நான்
பிறந்தேன்
இந்தப் பூமியிலே

சட்டங்கள்
போட்டது
யார்குற்றம்

இங்கு நீ
வந்தது
உன்குற்றம்

யுத்தத்தை
கொண்டுவந்தது
யார்குற்றம்

பூமியில்
பிறந்தது
என் குற்றம்

என்னுடைய
கல்லறையில்
ஆவது

அந்த யுத்த அவல
ஓசை இல்லாது
ஒழியட்டும்

என்னை விட்டுவிடு

நான் பூலோக
கன்னியை
பார்த்ததும்
இல்லை

தேவலோக
தேவதையை
கண்டதும்
இல்லை

இறம்பை
ஊர்வசியை
பார்த்ததும்
இல்லை

உன்னை பார்த்தேன்
பெண்ணே
நீதான் அந்த
தேவதையோ?

பிரம்மன்
செதுக்கிய
சிற்பமும்
நீதானோ?

விசுவாமித்திரனின்
தவத்தை
குலைத்தவளும்
நீதானோ?

இந்திரனை
மயக்கிய
மோகினியும்
நீதானோ?

மதுரை
மீனாச்சி
அம்மனும்
நீதானோ?

நெல்லை
காந்திமதி
தேவியும்
நீதானோ?

தஞ்சாவூர்
சிற்பமும்
நீதானோ
பெண்ணே?

என்னை
நீயும்
ஏன் நாடி
வந்தாய்?

என் இதயத்தை
திருடவா
நீயும்
வாந்தாய்?

வேண்டாம்
பெண்ணே
நீயும் என்னை
விட்டுவிடு!!!

புரிந்துகொள்ளுங்கள்

சுத்துகின்ற
பூமியில் நாம்
நிரந்தரம்
இல்லை

இதை சிந்திக்க
மனிதனுக்கு
நேரமும்
இல்லை

சத்தம் போட்டு
யாரும் இங்கு
சண்டை போடத்தேவை
இல்லை

நாளை இந்த
பூமியில்
நாம் யாரும்
இல்லை

உயர்வு
தாழ்வு
இங்கு தேவை
இல்லை

நாளை நீ
போகும் போது
உன் கூடவருவது
இல்லை

சாதி மத
பேதம்
இங்கு பெரும்
தொல்லை

அதனால்
தமிழனின் வாழ்வில்
முன்னேற்றம்
இல்லை

கறுப்பு
வெள்ளை என்று
இங்கு யாரும்
இல்லை

இது மாயையின்
தோற்றம்தான்
நீ புரிந்து
கொள்வது இல்லை

இங்கு
வாழ்வதுதான்
வாழ்க்கை
இல்லை

இதை புரியாத
மனிதன்
பூரணமனிதனும்
இல்லை

கடவுளே

ஏன் படைத்தாய்
இறைவா
என்னை
ஏன் படைத்தாய்

ஏன் வதைத்தாய்
இறைவா
என்னை
ஏன் வதைத்தாய்

பாவி ஜீவனாக
என்னை ஏன்
இறைவா
நீ படைத்தாய்

பரலோகத்தில்
ஏன்
என்னை
ஏற்கமறுத்தாய்

ஏன் இந்த
பூலோகத்தில்
என்னைப்
படைத்தாய்

நான் உன்மீது
கொண்ட
அன்பினாலா
என்னை உதைத்தாய்

பாவம் அறியாத
என்னை ஏன்
இந்த சாத்தானின்
பூமியில்படைத்தாய்

உன்னைத் தொடமாட்டேன்

உன்னைத்
தொட மாட்டேன்
உன்னைத்
தொட மாட்டேன்
வெண்நிலவே
உன்னைத்
தொட மாட்டேன்
கண்களிலே
உன்னை நானும்
கொள்ளை
இடமாட்டேன்
காதல் என்று
சொல்லி உன்னை
இழுக்க மாட்டேன்
உன்னைப் போல
நானும் தேய்ந்து
வளர மாட்டேன்
காதல் கன்னி
அவள்போல உன்னை
இம்சை செய்ய மாட்டேன்
எட்டாத உயரத்தில்-நீ
ஏணி வைத்தும்
உன்னைப்
பிடிக்க மாட்டேன்
உன்னைப்போல
நானும் இங்கே
தனிமையில்
ஏங்க மாட்டேன்
தேன் நிலவு
தேவதையே-நான்
தேம்பியழ மாட்டேன்
தேடி நீ என்னை
வந்தாலும் உன்னைத்
தீண்ட மாட்டேன்

எது அழகு

அழகா
அழகா வான்
மதிதான்
அழகா

பூமியில்
பெண்மதி
அவள்தான்
அழகா

வானத்து
விண்மீன்கள்
ஒளிதான்
அழகா

மங்கை
அவள் கண்
சிமிட்டல்தான்
அழகா

மேகத்தில்
தோன்றுகின்ற
வானவில்தான்
அழகா

மங்கை அவள்
தாவணியின்
வர்ணங்கள்தான்
அழகா

கீழ்வானம்
சிவக்கின்ற
சூரியன் தான்
அழகா

வெக்கத்தால்
சிவக்கின்ற அவள்
கன்னங்கள்தான்
அழகா

பூமியை
நனைக்கின்ற
மழைத்துளிகள்தான்
அழகா

கண்களைக்
கழுவும் அவள்
குறும்பு அழுகைதான்
அழகா

கூவுகின்ற
குயிலின்
குரல்தான்
அழகா

அவள்
பேசுகின்ற
தமிழ்தான்
அழகா

வா வா அன்பே

முழுமதி
நிலவே வா

வெண்மதிச்
சரமே வா

இயல் இசைக்
கவியே வா

சுந்தரத்
தமிழே வா

இனிமையின்
குரலே நீ வா

வானவில்லின்
நிறமே வா

தோகையின்
அழகே வா

தென்றலின்
உணர்வே வா

தெம்மாங்கு
பாடி நீயும் வா

கலங்காதே........

படம்

இருள் என்று இருந்தால்
உன் வாழ்வில் பகலும் வரும்
இதயமே கலங்காதே...
அமாவாசையாக இருந்தால்
பௌர்ணமி நிட்சயம் வரும்
உயிரே கலங்காதே...
சூரியனாக துன்பங்கள்
உன்னை சுட்டாலும்
சந்திரன் வருவான்
நண்பனே கலங்காதே...
வரண்டுபோன நிலம் போல்
உன்வாழ்வு இருந்தாலும்
வரும் நதியவன் மழை
கொண்டு வருவான்
அன்பே கலங்காதே...
கலக்கம்தான்
உன் வாழ்வு அல்ல
எதிர் நீச்சல்
போடு கலங்காதே

இந்த நாள் எப்போது

யுத்த மேகங்கள் கலைந்து-வானில்
குண்டு மழைகள் ஓய்ந்து-அடங்கி
மரணத்தின் ஓலங்கள் மறைந்து-ஓடி
இரத்ததின் ஆறுகள் இமைகள்- மூடி
நரபலி மனிதனின் பற்கள்-விழுந்து
புரையோடிய மக்கள் கொள்கைகள்-மாறி
இன்றுதான் பிறந்தோம் என்று-கூறி
பறவைகள் வானில் இனியகானம்-பாடி
பொன்மணி நெற்கள் கொழித்து-விளைந்து
பிறந்த் பூமியில் உறவுகள்-கூடி
இனிமையாகும் அந்நாள்-எந்நாள்

தூக்கு கயிறு

படம்

வாழ்க்கை என்பது பாசக்கயிறு
வாழ்க்கையின் முடிவில் எமனின்கயிறு
கோழையே உனக்கு ஏன் இந்தக்கயிறு

உனக்கு காதல் சொல்லிதந்தது யார்?

படம்

சித்திரமே சித்திரமே
சிந்தையை மயக்கும்
இந்தக்காதல் கலையை
உனக்கும் சொல்லி
தந்த கலைஞன் யாரோ?

காதலி

நறு மணம்
வீசும்
மலராக
இருந்தால்

நானும்
உனக்கு முள்
வேலியாக
இருப்பேன்

பயன்தரும்
விதையாக
நீயும்
இருந்தால்

அதுக்கு
பசளையாக
நான்
இருப்பேன்

எழுத்தாக
நீயும்
இருந்தால்
உன்னை

கவிதையாக
இங்கு
நானும்
கோர்த்துடுவேன்

வெண்ணிலவாக
நீயும்
இருந்தால்
உன்னை

கருமுகிலாக
வந்து
உன்கற்பை
காத்துடுவேன்

கண்ணாக
நீயும்
இருந்தால்
உன்னை

இமையாக
வந்து
நானும்
காத்திடுவேன்

மூக்கு
போல
நீயும்
இருந்தால்

நானும்
உனக்கு
சுவாசம்
தந்துடுவேன்

வாய்
போல
நீயும்
இருந்தால்

என் கவித்
திறனை
உனக்கு
தந்திடுவேன்

இதயத்தில்
நீயும்
இடம்
தந்தால்

உன்
துடிப்பாக
நானும்
மாறிடுவேன்

ஜட
உடலாக
நீயும்
இருந்தால்

உன்
உடலுக்கு
என் உயிரைத்
தந்துடுவேன்

வாழ்க்கை

விழுந்தவனைத்
தான் இங்கு
மாடும் ஏறி
மிதிக்குது

நொந்தவன்
புண்ணில்
அம்பு வந்து
குத்துது

சுமைதாங்கி
மீதுதான்
இடியும்
வந்து விழுகுது

கட்டிய மனக்
கோட்டை
எல்லாம் சுக்கு
நூறாய் போகுது

பரதேசி
போலத்தான்
இந்த உயிரும்
சுத்துது

கால்கள் போன
போக்கிலே
இந்த உயிர்
போகுது

வாழ்க்கை
என்பதே
அர்த்தமின்றி
வீணாகப் போகுது

முடிவு உள்ள
வாழ்கையில்
முன்னேற
மனம் துடிக்குது

பரந்து பட்ட
உலகத்தில்
இறக்கை இன்றி
பறக்கத் துடிக்குது

கிடைத்தே
போதும்
என்று மனமும்
தடுக்குது

காதலியே

நான் உன்னை
நேசிக்கிறேன்
அது உனக்குப்
புரியவில்லை
நீ என்னை
நேசிப்பாயா?
நான் கல்லறைக்கு
போன பின்பாவது
காதலியே!!!

காதல் கடிதம்

நீ வரும்
பாதையில்
உனக்காக
காத்து
இருந்தேன்

புள்ளிமான்
போல
துள்ளி
வருவாய்
என்று

எழுதிய
காகிதத்தை
உனக்குத்
தரகாத்து
இருந்தேன்

நீயும் மண
மாலையுடன்
வந்தாயே
பக்கத்துவீட்டு
பாலனுடன்

எழுதிவைத்த
காகிதமும்
என்னை
பார்த்து
சிரிக்கிறது

இதை
எப்படித்தான்
தாங்குவேனோ
கண்ணே
பெண்ணே

அழகு

மொழியில் தமிழ் அழகு
தமிழுக்கு கவி அழகு

குரலுக்கு குயில் அழகு
குயிலுக்கு குஞ்சு அழகு

நடைக்கு அன்னம் அழகு
அன்னத்துக்கு வெண்மை அழகு

நடனத்துக்கு மயில் அழகு
மயிலுக்கு தோகை அழகு

இசைக்கு யாழ் அழகு
யாழ் மண்ணுக்கு பேச்சு அழகு

கிளிக்கு சொண்டு அழகு
சொண்டுக்கு கொவ்வை அழகு

கொம்புக்கு மான் அழகு
மானுக்கு புள்ளி அழகு

கூந்தலுக்கு பெண் அழகு
பெண்ணுக்கு தாய்மை அழகு

உழைப்புக்கு ஆண் அழகு
ஆணுக்கு தோள் அழகு

எனக்கு நீ அழகு
உனக்கு நான் அழகு

தமிழா?

தமிழினமே
தமிழினமே
எங்கே
போகின்றாய்

அகதியாக
வந்து நீயும்
உன் மானதை
விடுகின்றாய்

அச்சம் மடம்
நாணம் பயிர்ப்பு
என்றால் என்ன
என்கின்றாய்

தமிழ் மொழியை
நீயும்
ஏளனம்
செய்கின்றாய்

காதலனை
நாளுக்கு
நாள்
மாத்துகின்றாய்

கற்பு என்றால்
என்ன
என்று
கேட்கின்றாய்

ஊரை உறவை
விட்டு வந்தும்
உணராமல்
இருக்கின்றாய்

பண்பாடு மறந்து
நீயும் உன்
அடையாளம்
மறக்கின்றாய்

வெளி நாடு
தான்உன்
அப்பன் நாடு
என்கின்றாய்

நாசி அடித்தால்
நீ எங்கே
போகப்
போகின்றாய்???

கவிக்கடல்

கவிதயாலே
கவிதை
இங்கு புனையாப்
பார்க்கிறேன்

கவிதை என்னும்
பாற்கடலை
நக்கி குடிக்கப்
பார்க்கிறேன்

அந்த பாற்
கடலில் பள்ளி
கொள்ள ஆசை
கொள்கிறேன்

பாற்கடலை
நானும்
கடைந்து பருகப்
பார்க்கிறேன்

தேவர்கள்
அசுர்கள் போல
நானும் முயன்று
பார்க்கிறேன்

விடம் உண்ட
கன்டன் போல
கவிதையில்
சிக்கிதவிக்கிறேன்

மொத்தத்தில்
நானும்
கவிமழையில்
முழ்கிப்போகிறேன்

காதலி

மொழிக்கு
உயிர்
எழுத்துப்போல
என் உடலின்
உயிர் நீ
தான் பெண்ணே

நீ கண்களால்
பேசும் அந்த
மொழிக்கு
இவ்வுலகில்
வரிவடிவம்
உண்டா பெண்ணே

உன்னுடய
சிரிப்புக்கு
நிகரான சொல்
எந்த மொழியில்
உண்டு
பெண்ணே

நீ பேசுகின்ற
குரலின்
இனிமை
எந்த இசைக்கருவியில்
தோன்றும்
பெண்ணே

கருமுகில்
போன்ற உன்
கூந்தல் நறுமணம்
எந்த மலரில்
உண்டு
பெண்ணே

உன்
இதயதின்
துடிப்பு
என் பெயர்தான்
சொல்கிறதா
பெண்ணே?

உன்
சுவாசத்தின்
பிரணவாயு
நான்
தானா
பெண்ணே?

காதலன்

உன்னைக்
கவிபாட
எனக்கு
வெக்கமடா

உன்னைப்போல
அழகன்
யாரும்
இல்லையடா

கருமை
நிற
சுருள்
முடியழகா

உனக்கு
நான்
தான்
பேரழகா

அகன்ற
தோழ்கள்
வீர
மார்பழகா

அதில் என்
முகத்தைப்
புதைத்தேன்
அது நாணமடா

சிங்கம்
போன்ற
வீர
நடையழகா

உன்
கருணையின்
கண்கள்
தானழகா

என் கண்களின்
ஒளி
விம்பம்
நீதானடா

அன்புக்கு
நீயும்
என்
தந்தையடா

அரவணைப்பில்
நீயும்
என்
தாய்தானடா

உன்னைப்போல
என்னைக்
கவர்ந்தவர்
இல்லையடா

மொத்ததில்
நீயும்
என்
இதயமடா

தாய்

பத்துமாதம்
சுமந்து
பத்திரமாக
பெற்றதாய்க்கு

பத்து ஜென்மம்
எடுத்தாலும்
பட்டகடன்
தீர்ந்துடுமா

எந்த ஜென்மம்
என்றாலும் நீதான்
எனக்கு தாயாக
வேண்டும் அம்மா

Wednesday, June 25, 2008

ஆசைகள்

நான் பிறந்த
மண்ணை
தொட்டுப் பார்க்க
ஆசை

வேப்பமரத்து
நிழலில்
படுத்து
உறங்க ஆசை

பலாமரத்து
கனியை
பறித்து
தின்ன ஆசை

பனை
மரத்துக் கள்ளை
களவா குடித்துப்
பார்க்க ஆசை

ஒடியல் மா
புட்டு
சாப்பிடத்தான்
ஆசை

தேக்க
மரத்துக் கிளியை
பிடித்து
வளர்க்க ஆசை

தமிழ்
வாத்தியாரிடம்
குட்டு
வாங்க ஆசை

கோவில்
மணியை ஒருக்கா
அடித்துப் பார்க்க
ஆசை

புளியமரத்து
பழத்தை
சூப்பித் தின்ன
ஆசை

மாமரத்துக்
காயை
குத்தித் தின்ன
ஆசை

கிணத்து
தண்ணிரில்
அள்ளி
குளிக்க ஆசை

கொடிகாமத்து
தேங்காய்
கொறித்து
தின்ன ஆசை

கீரி மலைக்
கேணியில்
நீச்சல்
அடிக்கத்தான் ஆசை

காங்கேசந்துறை
சுண்ணாம் போடு
வெத்திலை
போட ஆசை

மாசி முரல்
சொதியோட
இடியப்பம்
சாப்பிடத்தான் ஆசை

ஜாதியம் பேசும்
நாக்கை
அடைத்து விட
ஆசை

சீதனம் வாங்கும்
கோழை தலையில
மொட்டை போட
ஆசை

பெண்கள் கையை
இழுப்பவன்
கையை முறித்து
விட ஆசை

சிங்களப் படையை
மண்ணை விட்டு
துரத்தி விட
ஆசை

பொங்கி எழும்
மக்கள் படையுடன்
சேர்ந்து விட
ஆசை

மாணவரின்
பேனாவை பறிக்கும்
கயவன் நெஞ்சில்
குத்திவிட ஆசை

ஈழத்தில்
கற்றவரை கொல்லும்
மூதேவிகள் முகத்தில்
குத்திவிட ஆசை

பேரினவாதம்
பேசும் பிக்குவின்
காவியை
களட்டிவிட ஆசை

காட்டிக் கொடுக்கும்
கயவன்
மண்டையில்
போட ஆசை

சொந்த மண்ணை
மீட்க நானும்
அங்கு போக
ஆசை

மாவீரர்
தியாகத்தை
என் கவியில்
பாட ஆசை

கரும்புலிகள்
வீரத்தை
புதிய புறநானூற்றில்
எழுதிவிட ஆசை

அகதி என்ற
சொல்லை மாற்றி
தமிழ் புலி
ஆகி விடஆசை

மலரும்
தமிழ்ழீழத்தை
பார்த்துவிட
ஆசை